செய்திகள்

திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடக்கம்

Published On 2019-03-31 13:19 GMT   |   Update On 2019-03-31 13:19 GMT
திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடக்கம்

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

திண்டுக்கல் அருகே நத்தம் செங்குறிச்சி, வேம்பார்பட்டி, சாணார் பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழைப் பொழிவு இல்லாததால் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து மா விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கிருந்து திண்டுக்கல், காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால் மாம்பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்து குறைந்துள்ளது. ஆனால் முதல் தரமான செந்தூரம் ஓரளவு தாக்குபிடித்து வரத்து அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் செந்தூரம் மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மாம்பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சி மற்றும் கஜா புயலால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் ஓரளவு இருந்த போதும் விலை குறைவாகவே கேட்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஒரு கிலோ மாம்பழம் தரத்துக்கேற்ப ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலத்தில் பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

Similar News