செய்திகள்

எஸ்.கைகாட்டியில் குடியிருப்புக்குள் புகுந்து கரடிகள் தொடர் அட்டகாசம் - பொதுமக்கள் பீதி

Published On 2019-03-27 16:40 GMT   |   Update On 2019-03-27 16:40 GMT
எஸ்.கைகாட்டியில் கூண்டில் சிக்காத கரடிகள் குடியிருப்புக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரி கதவை 3 முறை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த கரடிகள் குடியிருப்புக்குள் நடமாடி வந்தன. கடந்த வாரம் கக்குளா மாரியம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

இதையடுத்து கரடிகளை பிடிக்க கோவில் வளாகத்தில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. மற்ற 2 கரடிகளும் கூண்டில் சிக்காமல் அந்த கூண்டை சுற்றி சுற்றி வந்ததுடன் ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டன. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 2 கரடிகளை விரட்டினர். பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர்.

இந்த நிலையில் கூண்டில் சிக்காத மற்ற 2 கரடிகளும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் சண்டையிட்டு கொள்கின்றன. கரடிகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே வனத்துறையினர் விரைந்து அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News