செய்திகள்

மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கைதான பைனான்ஸ் அதிபர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2019-03-18 10:09 GMT   |   Update On 2019-03-18 10:09 GMT
தர்மபுரி அருகே மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி நெடுமாறன் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் உமா (வயது 35). பி.இ. பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்கிற கருணாநிதி என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கருணாநிதி ரியல் எஸ்டேட் தொழிலும், சினிமா துறையில் பைனான்ஸ் வழங்கும் தொழிலும் செய்து வருகிறார். கருணாநிதி-உமா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக உமா தனது கணவரை பிரிந்து தர்மபுரியில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக கருணாநிதியும், உமாவும் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த வழக்கு தர்மபுரி நீதிமன்றத்தில் நடத்து வருவதாக தெரிகிறது.

வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய 2 நாட்களில் கருணாநிதி தர்மபுரிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பார்க்க கருணாநிதி தர்மபுரி நெடுமாறன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது கருணாநிதி தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, சுட்டு விடுவதாக உமாவை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன உமா கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கருணாநிதியை பிடித்து வைத்து கொண்டு தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனே அங்கு விரைந்து கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கருணாநிதியிடம் இருந்தது ரப்பர் குண்டு போட்டு சுடப்படும் ஏர்கன் என்று அழைக்கப்படும் கை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த துப்பாக்கியை அவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கியை தர்மபுரி டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பைனான்ஸ் அதிபர் கருணாநிதியை கைது செய்து தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்தி ரேட்டு உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News