செய்திகள்

சிறுபாக்கம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.5 லட்சம் சிக்கியது - பறக்கும்படை அதிரடி வேட்டை

Published On 2019-03-16 12:11 GMT   |   Update On 2019-03-16 12:11 GMT
சிறுபாக்கம் அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.5 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் சிறுபாக்கம் பகுதியில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த முருகேசன்(50), செந்தில் குமார்(50) என்பது தெரிந்தது.

முருகேசன் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 350 இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் கேட்டபோது, மரவள்ளி கிழங்கு வெட்டிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று கூறினர்.

இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து நெய்வேலியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரையும் சிறுபாக்கம் அருகே பறக்கும் படையினர் வழிமறித்தனர். அந்த காரில் விழுப்புரம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா செயலாளர் மகேந்திரன்(33), ரம்யா(35) ஆகியோர் இருந்தனர்.

பின்னர் ரம்யா வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனைத்தொடர்ந்து இந்த பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனசோதனை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News