செய்திகள்

சீர்காழியில் தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடிகள் கைது

Published On 2019-03-09 10:31 GMT   |   Update On 2019-03-09 10:31 GMT
சீர்காழியில் தொழிலதிபர்களை பிரபல ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி:

சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.

அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News