செய்திகள்

குளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்

Published On 2019-02-17 18:02 GMT   |   Update On 2019-02-17 18:02 GMT
அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கினர்.
அன்னவாசல்:

அன்னவாசல் ஒன்றியம் குளவாய்ப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான புத்தகம், மேஜை, பீரோ, மின்விசிறி, மரக்கன்றுகள், சிந்தனை புத்தகங்கள், முதலுதவி பெட்டி, ஸ்பீக்கர் மைக், எழுது பொருட்கள், கணித பெட்டி, குப்பைத்தொட்டி, கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருட்களையும், குளவாய்ப்பட்டி திடலில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக பள்ளிக்கு வந்தடைந்தனர்.

இதைதொடர்ந்து பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிம்சன் பாஸ்டீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சண்முகநாதன் வரவேற்றார். இதில் வட்டாரகல்வி அலுவலர் பொன்னழகு, துரையரசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜன் மற்றும் பெற்றோர்கள் சார்பில் செல்வம், அடைக்கலம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கொண்டு வந்த பொருட்களை பெற்றோர்கள், தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், கல்பனா, பாண்டியம்மாள், சரவணக்குமார், விஜயக்குமார், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஆணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர் துரையரசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிக்கு தேவையான பல்வகையான கல்வி உபகரணங்களை பொதுமக்கள் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பழனிக்கண்ணுவிடம் வழங்கினர். இதில் வட்டார வள மைய பயிற்றுனர் கோவிந்தராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பின்னங்குடி, சீகம்பட்டி, ஆணைப்பட்டியை சேர்ந்த பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீரனூர் அருகே உள்ள விசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குன்றாண்டார்கோவில் வட்டார கல்வி அலுவலர் துரைராசு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ்தர் லில்லி வரவேற்றார். பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். இதில் மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தி, பெருமாள், பிரசன்னா, கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆரோக்கிய மேரி நன்றி கூறினார். 
Tags:    

Similar News