செய்திகள்

அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது - திருநாவுக்கரசர்

Published On 2019-02-16 04:57 GMT   |   Update On 2019-02-16 04:57 GMT
அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #Thirunavukkarasar

அறந்தாங்கி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.

ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #Congress  #Thirunavukkarasar

Tags:    

Similar News