செய்திகள்

தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்- கேஎஸ் அழகிரி

Published On 2019-02-13 08:56 GMT   |   Update On 2019-02-13 08:56 GMT
தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
கடலூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று கடலூர் வந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மதம், ஜாதி போன்ற வேற்றுமைகளை மையப்படுத்தி பாரதிய ஜனதா இந்த தேசத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகிறது.

மகாத்மா காந்தி மதச்சார்பற்ற கொள்கையை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்திய மக்கள் துணை போக கூடாது என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் மதசார்பற்ற அணிகளை ஒன்று திரட்டி கடுமையாக போராடி வருகிறோம்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற அணிகள் செயல்பட்டு வருகிறது. எங்கள் அணி கொள்கை ரீதியான அணி. தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க ஒரு அமைப்பு வேண்டும். தமிழகத்தில் உள்ள பல திட்டங்களை முன்வைத்து தான் எங்கள் மதசார்பற்ற கூட்டணி அமைந்து உள்ளது.

இதன்மூலம் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஆகையால் தான் உங்கள் ஆதரவுகளை வாக்குகளாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.



தமிழ்நாட்டின் அரசியலே தேர்தல் வருவதற்கு முன்பு மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கொள்கை. அதுதான் அவர்களின் நடைமுறையாகும். இதனை எல்லாம் மீறி தான் மக்கள் வாக்களிப்பார்கள். தற்போது தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி தற்போது மூன்று மாநிலங்களில் தேர்தலில் வெற்றிபெற்று 48 மணி நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் கூட்டத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது என்று கூறுகிறார்.

அதற்கு மாற்று திட்டமாவது கூற வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பொருளாதார நிலையும், சமூக துறைகளிலும், விவசாய துறைகளிலும், தொழில் துறைகளிலும் பிரதமர் மோடிக்கு தெளிவான சிந்தனை கிடையாது. இதனால்தான் பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தற்போது பல்வேறு சலுகைகள் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. தமிழக மக்களின் மனநிலை இந்த 2 அரசையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இருந்து வருகிறது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினால் செலவும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #KSAlagiri
Tags:    

Similar News