செய்திகள்

தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பாஜக எங்களை பழிவாங்குகிறது- தம்பிதுரை எம்பி பேட்டி

Published On 2019-02-09 12:48 GMT   |   Update On 2019-02-09 12:48 GMT
பா.ஜனத, தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என்று தம்பிதுரை எம்பி கூறியுள்ளார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுக்கும் உரிமை, தன்மானம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ?, அவர்களுடன்தான் கூட்டணி என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.

இன்று நம்நாட்டில் தேசிய கட்சிகளே கிடையாது. எல்லாம் கட்சிகளும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் தேசிய கட்சி நிலைமையில் இல்லை என்றார்.

பின்னர் அவரிடம் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பித்துரை பதில் அளித்ததாவது:-

பா.ஜ.க.வுடன் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசவே இல்லை. பா.ஜ.க. கூட்டணியிலும் இல்லை. பாஜ.க. என்னை விமர்சனம் செய்வதாலேயே நான் பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி வைப்போம்.


திராவிட கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று தமிழிசை கூறுகிறார். திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசிய கட்சிகளை நாங்கள் எப்படி வர விடுவோம். பா.ஜ.க., தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுகின்ற ஒரே தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. 

இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

Tags:    

Similar News