விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சரிவில் இருந்து மீளுமா இங்கிலாந்து அணி?

Published On 2025-12-16 09:14 IST   |   Update On 2025-12-16 09:14:00 IST
  • ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
  • காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆடுகளம் வேகம் குறைந்த பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.

இங்கிலாந்தை பொறுத்தவரை பேட்டிங் சீரற்றதாக இருக்கிறது. நடப்பு தொடரில் அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் சதம் அடித்துள்ளார். வீரர்கள் இன்னும் அதிகமாக போராட வேண்டும் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் கைகோர்க்கிறார். இதனால் மைக்கேல் நேசர், பிரன்டன் டாக்கெட், ஸ்காட் போலன்ட் ஆகியோரில் இருவரது இடம் காலியாகி விடும்.

மற்றபடி பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி வலு சேர்க்கிறார்கள். அதிலும் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் கடைசியாக ஆடிய 3 டெஸ்டிலும் சதம் விளாசி இருப்பது கவனிக்கத்தக்கது.

அடிலெய்டு மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக இங்கு விளையாடிய 14 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு நடந்த இரண்டு டெஸ்டிலும் எதிரணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா வரிந்து கட்டும். அவர்களின் வீறுநடைக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? அல்லது மறுபடியும் சரண் அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News