செய்திகள்

சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் மர்ம மரணம்

Published On 2019-02-06 10:14 IST   |   Update On 2019-02-06 10:14:00 IST
சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாண்டியாபுரம், புதூரை சேர்ந்தவர் கனிராஜா (வயது43). இவரது தங்கை பானுமதி (21).

இவருக்கும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பின் பானுமதியும், முத்துக்குமாரும் 5 நாள் மட்டுமே ஒன்றாக வசித்துள்ளனர்.

அதன்பிறகு முத்துக்குமார் பெங்களூர் சென்று விட்டார். அவ்வப்போது மனைவியை சந்திக்க வருவாராம். இந்த நிலையில் நேற்று முத்துக்குமார் வீட்டில் இருந்து கனிராஜுக்கு போன் வந்தது. போனில் பேசிய முத்துக்குமாரின் உறவினர்கள் உனது தங்கை பானுமதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடக்கிறார் என கூறினார்கள்.

இதையடுத்து கனிராஜ் பதறியபடி சூரங்குடி வந்தார். அங்கு சென்றதும் பானுமதி சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர் சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். அங்கு பானுமதி ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கனிராஜ் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கனிராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி சாவுக்கு காரணம் என்ன? அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News