செய்திகள்

8வது நாளாக போராட்டம் - மதுரையில் அரசு ஊழியர்கள் 150 பேர் கைது

Published On 2019-01-29 08:30 GMT   |   Update On 2019-01-29 08:30 GMT
மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #Strike
மதுரை:

பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு நடவடிக்கையால் இன்று அரசு பள்ளிகளில் 80 சதவீத ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்றும் 8-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் 68 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதேபோல் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தன. #JactoGeo #Strike

Tags:    

Similar News