செய்திகள்

கொடநாடு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு- புகழேந்தி

Published On 2019-01-21 04:49 GMT   |   Update On 2019-01-21 04:49 GMT
கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது என புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #Kodanadestate #OPS
திண்டுக்கல்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக பழி சுமத்தப்படுகிறது. ஆனால் சிறையில் சசிகலா பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. டெல்லில் இருந்து பிரதமர் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறார். பா.ஜனதா அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால் 3 மணி நேரம்கூட அவர் தமிழக முதல்வராக இருக்க முடியாது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி அளிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.


கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். எனவே திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்பொழுதும் தெளிவான முடிவு எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #Kodanadestate #OPS
Tags:    

Similar News