செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்- வலைகளை அறுத்து விரட்டியடித்தனர்

Published On 2019-01-20 10:06 GMT   |   Update On 2019-01-20 10:06 GMT
ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். பின்னர் வலைகளை அறுத்து எறிந்தனர். #SriLankannavy #Rameswaramfisherme

ராமேசுவரம்:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர்.

அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டனர்.

அப்போது சில கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து வலைகளை அறுத்து எறிந்தனர். தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவரது படகிற்குள் நுழைந்த கடற்படையினர், ரீகன் உள்பட 4 மீனவர்களை தாக்கினர்.

மேலும் பல மீனவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை விட்டு விட்டு இரவிலேயே கரை திரும்பிவிட்டனர்.

தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது மீன்பிடி தொழிலை நசுக்கும் செயல். இதனை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SriLankannavy #Rameswaramfisherme

Tags:    

Similar News