இந்தியா

மேற்குவங்கத்தில் SIR பட்டியலில் இல்லாத 1.2 கோடி வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published On 2026-01-19 19:46 IST   |   Update On 2026-01-19 19:46:00 IST
  • கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
  • இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது

மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.19) உத்தரவிட்டது.

ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பெயர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தந்தை பெயரில் மாற்றம், வயது முரண்பாடு (எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15-க்கும் குறைவாகவோ அல்லது 50-க்கும் அதிகமாகவோ இருத்தல்) போன்ற காரணங்களால் இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 1.25 கோடி பேரின் தரவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது 

Tags:    

Similar News