செய்திகள்

கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் கணேஷ் தகவல்

Published On 2019-01-07 17:41 GMT   |   Update On 2019-01-07 17:41 GMT
கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை:

கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில், ஆரோக்கிய பாரத பயணம் எனும் தொடர் சைக்கிள் பயணம் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின் படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ண போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக இந்த போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssai.gov.in/creativitychallenge என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகள் மூலம் snfatschool@fssai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். மின்னணு கலை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ-மாணவிகளின் திறன் மேம்படும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவ-மாணவிகள் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தங்களது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபுவை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News