செய்திகள்

அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் வேன் மீது அரசு பஸ் மோதல் - 20 பேர் காயம்

Published On 2018-12-22 17:39 GMT   |   Update On 2018-12-22 17:39 GMT
4 வழிச்சாலையில் தாறுமாறாக ஓடி எதிர் திசையில் நின்ற வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தார்கள்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிபட்டி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். வேனை பந்தல்குடியை சேர்ந்த மகேந்திர பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சென்டர் மீடியனில் மோதி எதிர்புறம் வாகனங்கள் செல்லும் சாலையில் நின்றது.

அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் மகேந்திரபாண்டியனில் 2 கால்களும் முறிந்தன. மேலும் வேனில் இருந்த ராஜலட்சுமி, சுப்பையா, பாப்பாத்தி, ருக்குமணி, ஜெயமணி, அரசு பஸ் டிரைவர் முத்து உள்பட 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் டிரைவர் மகேந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News