செய்திகள்

வத்தலக்குண்டுவில் ரூ.2¼ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

Published On 2018-12-21 11:23 GMT   |   Update On 2018-12-21 11:23 GMT
வத்தலக்குண்டுவில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.
வத்தலக்குண்டு:

தமிழகத்தில் புகையிலை, குட்கா, போதைபாக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டபோதும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அதிக அளவு போதை பாக்குகள் விற்கப்படுகின்றன.

குடோன்களில் பதுக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களே தேடி வந்து போதை பாக்குகளை வாங்குவதால் கடைக்காரர்கள் கூடுதல் விலை வைத்தபோதும் விற்பனை குறையவில்லை. போலீசார் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வத்தலக்குண்டு பகுதியில் சில மாணவர்கள் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் குட்கா பொருட்கள், போதைபாக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு பிளீஸ்புரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் மாணவர்கள் போதை பாக்குகள் வாங்கியது தெரிய வந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது 18 மூடைகளில் சுமார் ரூ2¼ லட்சம் மதிப்பிலான போதை பாக்கு, குட்பா பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் பாலரமேஷ் என்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News