செய்திகள்

திருப்பூரில் ஆயுர்வேத டாக்டர் -மனைவியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கும்பல் வாலிபர் சிக்கினார்

Published On 2018-12-19 12:56 IST   |   Update On 2018-12-19 12:56:00 IST
திருப்பூரில் ஆயுர்வேத டாக்டர் மற்றும் அவரது மனைவியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்.

திருப்பூர்:

திருப்பூர் ஆண்டிப்பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (75) ஆயுர் வேத டாக்டர். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய கிளினிக் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சாஜி தேவி (70). இவர்கள் இருவரும் தனியாக தான் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு ஸ்ரீதரன் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த 3 பேர் கும்பல் திடீரென எழுந்தனர்.

அவர்கள் முகமூடி, கையுறை அணிந்து இருந்தனர். கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருந்தனர்.

அக்கும்பல் சாஜி தேவியை பிடித்து அங்குள்ள அறையில் தள்ளி பூட்டினார்கள். பின்னர் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை எங்கு உள்ளது என கேட்டனர்.

அதற்கு ஸ்ரீதரன் பதில் அளிக்க மறுத்தார். உடனே கொள்ளை கும்பலில் ஒருவன் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியால் லேசாக கீறினான். இந்த நிலையில் அறையில் அடைக்கப்பட்டு இருந்த சாஜி தேவி சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதனை பார்த்ததும் 3 வாலிபர்களும் தப்பி ஓடினார்கள். அவர்களை பொது மக்கள் துரத்தினர். அவர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கினான்.

அவனை பிடித்து கயிற்றால் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்கள் பிடியில் சிக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.

அவனது சட்டைபையில் சென்னையில் இருந்து திருப்பூர் வந்ததற்கான டிக்கெட் இருந்தது.

எனவே அவன் சென்னையை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் 3 பேரும் ஸ்ரீதரன் வீட்டிற்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளனர்.

அவர்கள் கொள்ளையடிக்க வந்தார்களா? அல்லது ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து அவர்களது சொத்தை அபகரிக்க உறவினர்கள் கூலிப் படையை ஏவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News