செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி கொலை - 4 பேர் கோர்ட்டில் சரண்

Published On 2018-12-14 12:20 GMT   |   Update On 2018-12-14 12:20 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது48). தொழிலாளி.

இவரது தம்பி வீரமுத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வரங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் வீரமுத்துவிடம், முன்விரோதம் காரணமாக செல்வரங்கம், அவரது மகன்கள் செல்வமணி, ஞானகுரு மற்றும் உறவினர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம், ராஜேஷ் ஆகிய 6 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்கள் வீரமுத்துவை தாக்கினர். இதை பார்த்த கொளஞ்சி ஏன் என் தம்பி வீரமுத்துவை தாக்குகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் உள்பட 6 பேரும் சேர்ந்து கொளஞ்சியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் செல்வரங்கம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மற்ற 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வரங்கம், செல்வமணி, ஞானகுரு, சுரேஷ் ஆகிய 4 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் கல்யாணசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News