செய்திகள்

குட்கா ஊழல் விவகாரம்- விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

Published On 2018-12-07 08:03 GMT   |   Update On 2018-12-07 08:03 GMT
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். #Gutkha #GutkhaScam #Vijayabaskar
சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்களும் குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இவர்கள் யார் மீதும் இதுவரையில் நடவடிக்கை பாயவில்லை. அதே நேரத்தில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குட்கா குடோன் அதிபர் மாதவரராவ் உள்ளிட்ட 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் அதிகாரிகள் ஆவர்.


குட்கா வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

இதன்படி அவருக்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை ஏற்று சரவணன் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதன் காரணமாக 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரவணன் இன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் குட்கா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar
Tags:    

Similar News