செய்திகள்

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டப்படவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-12-07 07:38 GMT   |   Update On 2018-12-07 07:38 GMT
கஜா புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தான் அங்கு அணை கட்ட தொடர் முயற்சி செய்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சிக்க வேண்டும்.

காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பான முழு ஆய்வு மேற்கொள்ள சொல்லப்பட்டிருக்கிறது.


மேகதாது பிரச்சனையில் தி.மு.க.வினரும், காங்கிரசாரும் வே‌ஷம் போடுகிறார்கள். இந்த பிரச்சனையை பேசித்தீர்க்க தி.மு.க. கூட்டணியை தமிழக முதல்வர் கர்நாடகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது தவறு.

புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை. புயல் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்கிறது. அதன்பிறகு அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது.

பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவே தமிழகத்திற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் குட்கா விவகாரம் மட்டுமல்ல எந்த ஊழலாக இருந்தாலும் அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்கா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் வெளிநாட்டினர் வந்து எல்லா இடங்களையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்கள். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

வெளிநாட்டினர் விருந்தினராக வந்தால் அவர்களை வரவேற்கலாம். அழிக்க வருபவர்களை மகுடம் சூட்டி அழகு பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt
Tags:    

Similar News