செய்திகள்

சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம்- சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

Published On 2018-12-03 08:35 GMT   |   Update On 2018-12-03 08:35 GMT
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை தமிழக அரசு எதிர்த்தால் தனது கருத்தை அறிய வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #PonManickavel
சென்னை:

தமிழக கோவில்களில், புராதான சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைது செய்ய தொடங்கினார்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ந்தேதி பிற்பகலில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நவம்பர் 30-ந்தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.


இதையடுத்து வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். #PonManickavel
Tags:    

Similar News