செய்திகள்
மின் வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர்

Published On 2018-11-28 06:36 GMT   |   Update On 2018-11-28 06:36 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி தயாரித்து கொடுத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். #GajaCyclone #Vijayabaskar
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 4 ஆயிரத்து 62 குக்கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், 8 ஆயிரத்து 300 மின் மாற்றிகளும் முழுமையாக சேதம் அடைந்தன.

அவற்றை சீரமைக்கும் பணியில் தமிழகம், கேரளா, கர்நாடாக மாநில மின் வாரிய ஊழியர்கள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் உயிரை துச்சமென மதித்து மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின் விநியோகம் செய்யும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இதில் கடந்த வாரம் கீரனூர் பகுதியில் ஆபத்தான முறையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். இதுபோன்று உயிரை பணயம் வைத்து மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவோரை அமைச்சர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில்  இருந்து வந்துள்ள ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை அருகே மாத்தூர் பள்ளியில் தங்கியுள்ள மின் வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

இந்தநிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு சென்றார். அவர்களது பணியை பாராட்டிய பின்னர் இரவு உணவாக அவர்களுக்கு சப்பாத்தி தயாரித்து, தானே சுட்டு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்சார விநியோகம் செய்யப்படும். இதுவரை 4062 குக்கிராமங்களில் 2000 கிராமங்களில் மின்சார விநியோகம் சீரடைந்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களில் இரவு, பகல் பாராது நடந்துள்ளது. இதில் பல்வேறு சவால்களை மின் வாரிய ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.

அதேபோல் பழுதான, சேதமடைந்த 8300 மின் மாற்றிகளில் 5100 சரி செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ளவைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை பாராட்டியுள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

இதன் மூலம் நாங்கள் உறங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்வோம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Vijayabaskar
Tags:    

Similar News