செய்திகள்

புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் - திருநாவுக்கரசர்

Published On 2018-11-18 10:13 GMT   |   Update On 2018-11-18 10:13 GMT
புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Gajastorm

ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றும், நாளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறோம்.

புயலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் குடிநீர் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புயலால் பல குடிசைகள் இடிந்துள்ளன. மீனவர்களின் படகுகளை சரி செய்ய உடனடியாக நிதி உதவி அளிக்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி போதாது. இதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு குழு அமைத்து மாவட்டம் வாரியாக சென்று உயிர் இழப்பு மற்றும் உடமைகளை இழந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு வேண்டிய நிதி உதவி அளிக்க வேண்டும்.

இதற்கு மாதக்கணக்கு எடுத்துக் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். புயல் பாதித்த இடங்களில் அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

உடனடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த இடங்களை பார்வையிட வேண்டும். வழக்கம்போல மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு தனிநாடா என்று தெரியவில்லை.

மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவிக்கு ஒரு கணிசமான தொகையை வழங்க வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

முதலில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்- அமைச்சர் சென்று பார்க்கப்படும். பின்னர் மத்திய அமைச்சர்கள் பார்க்கட்டும். அதன் பின்னர் ராகுல்காந்தி வருவதை பற்றி பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Gajastorm

Tags:    

Similar News