செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-11-17 07:56 GMT   |   Update On 2018-11-17 07:56 GMT
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #gajacyclone #ministerjayakumar #cyclone

கடலூர்:

தமிழகத்தை மிரட்டிய ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டமான கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், திருச்சி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்திலும் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை கடலூர் வந்தார். பின்னர் அவர் துறைமுகம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ‘கஜா’ புயலில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

‘கஜா’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. எனவே மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால், கடற்கரையோரம் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்ததால் ஒருசில படகுகள் சேதமடைந்துள்ளன. அது குறித்து கணக்கெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்டங்களில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணி முடிந்ததும் அவர்கள் இது குறித்த விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார்கள். அதனை தொடர்ந்து படகுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அரசு சார்பில் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அந்தந்த பகுதி அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடலூர் துறைமுகத்தில் படகுகள் நிறுத்த நெருக்கடி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முதுநகர் துறைமுகத்தை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் துறைமுகம் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministerjayakumar #cyclone

Tags:    

Similar News