செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் கஜா புயல் ஏமாற்றியது: விவசாயிகள் கவலை

Published On 2018-11-16 12:22 GMT   |   Update On 2018-11-16 12:22 GMT
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை பெய்ய தொடங்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். #GajaStorm

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகள் நிரம்பியது.

மோர்தானா, ஆண்டியப்பனூர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின.

இதனால் விவசாயி பணிகள் துரிதமாக நடந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் மழை பெய்ய தொடங்கியது. மேலும் கர்நாடகா, ஆந்திராவில் மழைகாரணமாக தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றில் வெள்ளம் வந்தது.

அக்டோபர் மாத இறுதியில் 150-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி கோடி போனது. பல இடங்களில் கிடா வெட்டி பொதுமக்கள் பூஜை செய்தனர்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. சில ஏரிகளில் 25 சதவீத தண்ணீர் உள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் பெய்த மழையை நம்பி பயிரிட்ட வேர்க்கடலை பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர்.

இந்த நிலையில் கஜாபுயல் சென்னை, கடலூர் வழியாக கரையை கடக்கும் என முதலில் அறிவிக்கபட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

நேற்று காலையில் மந்தமான தட்ப வெப்ப நிலை நிலவியது. லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் பகுதியில் மட்டும் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் தூரலுடன் நின்ற விட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மழை பொய்த்து வருவதால் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. #GajaStorm


Tags:    

Similar News