செய்திகள்

இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் தங்கம், செல்போன்கள் பறிமுதல்

Published On 2018-11-14 00:28 GMT   |   Update On 2018-11-14 00:28 GMT
இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பாத்திமா (வயது 23) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் 2 தங்க சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரிடம் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க சங்கிலிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த முகமது நிசாம் (44) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 10 விலை உயர்ந்த செல்போன்கள், 17 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், 6 கேமரா லென்ஸ்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் 40 கிராம் தங்க கட்டி ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.14½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News