செய்திகள்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு- 3 அதிமுகவினரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் முயற்சி

Published On 2018-11-09 10:23 GMT   |   Update On 2018-11-09 10:23 GMT
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 அ.தி.மு.க.வினரை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. #Dharmapuribusburningcase
சென்னை:

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கும் ஒன்றாகும்.

கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி அந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி புறநகரான இலக்கியம் பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

தமிழக மக்களை பதை பதைப்புக்குள்ளாக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, மூன்று பேரின் தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதன் பேரில் 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தமிழக அரசு சுமார் 1,600 கைதிகளை விடுதலை செய்தது. அப்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.


ஆனால் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் கோரிய அரசின் ஆவணத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்க மறுத்து விட்டார். 3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்திய அந்த ஆவணத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் அந்த 3 பேரையும் விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. #Dharmapuribusburningcase
Tags:    

Similar News