செய்திகள்
கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசிய காட்சி.

20 தொகுதி இடைத்தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்க அ.தி.மு.க. அரசு திட்டம் - தங்கதமிழ்செல்வன் புகார்

Published On 2018-11-04 04:46 GMT   |   Update On 2018-11-04 09:49 GMT
20 தொகுதி இடைத்தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்க அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

ஆண்டிப்பட்டி தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான திப்பரேவு அணைத் திட்டம் செயல்படுத்தவில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினையை முன் வைத்து 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.

இதில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அ.தி.மு.க. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

 


அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடி, கூடுதல் செலவுக்கு ரூ.1000 கோடி என மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை இனி தினகரனால் மட்டுமே தரமுடியும். ஆட்சி மாற்றம் வரும் என்பதால் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துகின்றனர். பொதுவாக தேர்தல் என்றாலே ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு மரண பயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை எடப்பாடி அரசு இதுவரை எதிர்க்கவில்லை. அ.ம.மு.க. வில் துணை பொதுச்செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தற்போதும் ஒன்றாகவே உள்ளோம்.

இவ்வாறு பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

Tags:    

Similar News