செய்திகள்
கோப்புப்படம்

18 தொகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடக்காது- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2018-11-03 06:38 GMT   |   Update On 2018-11-03 06:38 GMT
அ.தி.மு.க. பேனர்களை அவர்களே கிழித்து விட்டு எங்கள் மீது பொய் வழக்கு போட வைத்துள்ளனர். 18 தொகுகளில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #ThangaTamilselvan #ADMK
மதுரை:

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவின் போது துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் மதியம் 1 மணிக்குச் சென்று மரியாதை செலுத்தினோம்.

அப்போது 8 மாவட்ட மக்கள் துணைப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு கொடுத்தனர். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாங்கள் அமைதியாக திரும்பினோம்.

அந்த நேரத்தில் அ.தி.மு.க. கொடிகளை தலையில் மஞ்சள் துணி கட்டியிருந்த சிலர் சேதப்படுத்தினர். எங்கள் கட்சியினர் யாரும் பேனர்களை சேதப்படுத்தவில்லை. அப்படி கிழித்திருந்தால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பிடித்திருக்க வேண்டியது தானே.

அதை விட்டு விட்டு தற்போது போலீசாரின் துணையோடு எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இதில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?

தற்போது நடப்பது மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி. நாங்களும் அ.தி.மு.க. தான். ஜெயலலிதாவின் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் தற்போது துரோக கும்பலிடம் இருந்து வெளிவந்து விட்டோம்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டு முன்ஜாமீன் பெற்றிருப்பவர்களை கூட கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் திட்டமிட்டு எங்களுக்கு தேவையற்ற தண்டனையை கொடுத்துள்ளனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரனிடம் மனு கொடுக்க வந்தோம். அவர் இல்லாததால் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்துவோம்.


தற்போதுள்ள மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மைனாரிட்டி அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே தற்போது 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு வேண்டுமானால் ஒரு வேளை இடைத்தேர்தல் நடத்தப்படலாம். மற்ற 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.

பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தான் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். நாங்கள் மேல்முறையீடு செய்தால் அது நிலுவையில் இருக்கும் என்பதால் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேர்தலின் போது அதனை வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் ராஜலிங்கம், ஜெயபால் உடனிருந்தனர். #AmmaMakkalMunnetraKazhagam #ThangaTamilselvan #ADMK
Tags:    

Similar News