செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-10-29 12:08 GMT   |   Update On 2018-10-29 12:08 GMT
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.

இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாராயம், மது விற்பனை செய்த 28 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 37 பேரும் என மொத்தம் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர், எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News