செய்திகள்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை- அதிமுகவினர் 3 பேரை முன்னதாக விடுவிக்க கவர்னர் மறுப்பு

Published On 2018-10-27 11:17 IST   |   Update On 2018-10-27 11:17:00 IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மூவரையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு தயாரித்து அனுப்பிய கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் திருப்பி அனுப்பியுள்ளார். #DharmapuriBusFire
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிரிமினல் வழக்கு ஒன்றில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதனால் ஆவேசமான அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

தர்மபுரியிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களுக்கு தீ வைப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கோவை விவசாய பல்கலைக் கழக பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

அந்த பஸ்சில் 44 மாணவிகள், 2 ஆசிரியைகள் இருந்தனர். பஸ்சில் தீ வைக்கப்பட்டதும் மாணவிகள் அலறியடித்தப்படி கீழே இறங்கினார்கள். ஆனால் நெரிசலில் சிக்கிய 3 மாணவிகள் பஸ்சுக்குள் சிக்கிக் கொண்டனர்.

கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற அந்த மூன்று மாணவிகளும் பஸ்சோடு தீயில் கருகி, துடிக்க, துடிக்க உயிரிழந்தனர். மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்பட்ட இந்த கொடூர செயலால் மூன்று அப்பாவி இளம்பெண்கள் கொல்லப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக சில அ.தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.


அவர்கள் மூன்று பேருக்கும் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சென்னை ஐகோர்ட்டும் அந்த தண்டனையை உறுதி செய்தது.

இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம்கோர்ட்டு அந்த வழக்கை விசாரித்து, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் தூக்கு தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதையடுத்து மூன்று பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் இருப்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை விடுதலை செய்ய கவர்னரிடம் தமிழக அரசு பரிந்துரைத்தது. அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் கவர்னர் அனுமதி அளிக்க வேண்டியது அவசியமாகும். எனவேதான் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

தமிழக அரசு அனுப்பிய கைதிகள் விடுதலை பரிந்துரை பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த 3 பேரையும் விடுதலை செய்யலாமா என்று சட்ட நிபுணர்களிடம் கவர்னர் கருத்து கேட்டார்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ ஆவணங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாங்கிப் பார்த்தார். பிறகு 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார்.

நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மூவரையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு தயாரித்து அனுப்பிய கோப்புகளையும் தமிழக அரசுக்கே கவர்னர் பன்வாரிலால் திருப்பி அனுப்பியுள்ளார். அதில் அவர் ஒரு குறிப்பும் எழுதி உள்ளார்.

“தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுவிக்க கோரும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று கவர்னர் அந்த குறிப்பில் எழுதி உள்ளார். இதனால் 3 பேரை முன்னதாக விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது.

மற்றபடி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சுமார் 500 கைதிகளை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DharmapuriBusFire #ADMK #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News