செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் எந்த கருத்து மோதலும் இல்லை- டிடிவி தினகரன்

Published On 2018-10-27 05:10 GMT   |   Update On 2018-10-27 05:10 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த கருத்து மோதலும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
மதுரை:

அ.தி.மு.க.வில் இருந்து தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து நேற்று மதுரையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் வெற்றிவேல், பார்த்திபன் தவிர 16 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்செல்வன், எங்களை தகுதி நீக்கம் செய்த சபாநயகரின் முடிவு தவறானது என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இன்று காலை மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த புறப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவில் 18 பேரும் ஒற்றுமையாக கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களிடம் எந்தவிதமான கருத்து மோதல்களும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் என்னிடம்தான் உள்ளனர். அவர்கள் யாரும் பலனை எதிர்பார்த்து இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த சலசலப்புக்கும் இடமில்லை. அப்படி சலசலப்பு ஏற்படும் என்று நினைப்பவர்களின் ஆசை நிராசையாகிவிடும்.

எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்களைப்பற்றி துரோகிகள் பேசுகிற பேச்சுக்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் மன்றம் சரியான பாடம் புகட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #MLAsDisqualificationCase
Tags:    

Similar News