செய்திகள்

ஆத்தூர் பைபாஸ் சாலையில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2018-10-22 10:52 GMT   |   Update On 2018-10-22 10:52 GMT
ஆத்தூர் பைபாஸ் சாலையில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பாலம் வேலை செய்வதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியிலிருந்து ஞானசேகர், முனுசாமி, தினேஷ் குமார், தமிழ்செல்வன், மற்றொரு தமிழ்ச் செல்வன், விஜயகுமார், டேனியல், ஆசைத்தம்பி, பாரதி, பிரகாஷ், மணி, ராம்குமார், முத்துராஜ் ஆகிய 13 பேர் இன்று காலை ஒரு பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

வேன் ஆத்தூர் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த வேனை டிரைவர் கண்மணி (வயது 25) என்பவர் ஓட்டினார். அப்போது ஆத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த அத்தியப்பன் கவுண்டர் என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

தென்னங்குடி பாளையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் கண்மணியால் வேனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேன் வேகமாக சென்று சாலை ஓரமாக உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த அத்தியப்பன் கவுண்டர் பலியானார். வேனில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர். இதில் முத்துராஜ் (வயது 30) என்பவருக்கு பலத்த அடிப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மீதமுள்ள 12 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியான முத்துராஜ் பூலாம்பட்டி அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சோகத்துடன் திரண்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News