செய்திகள்

செந்துறை அருகே விவசாயிகள் மீட்ட நிலத்தில் வேலி அமைக்கும் பணி தீவிரம்

Published On 2018-10-16 15:29 GMT   |   Update On 2018-10-16 15:29 GMT
செந்துறை அருகே விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டிஎஸ்பி, செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் தலைமையில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரியிலிருந்து நல்லாம்பாளையம் வரை நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார்.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர்.

கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். மேலும் தங்களது வேலிகளை இந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த் துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டி.எஸ்.பி.மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் சென்று, பணியாளர்கள் உதவியுடன் பாதையில் மணலை கொட்டி லாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News