செய்திகள்

கடலாடியில் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடையடைப்பு

Published On 2018-10-05 05:10 GMT   |   Update On 2018-10-05 05:10 GMT
கடலாடியில் கடைக்குள் புகுந்து வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதை கண்டித்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கடலாடி:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அதே பகுதியில் இரும்புக்கடை வைத்துள்ளார். நேற்று குருப்பெயர்ச்சி என்பதால் சீனிவாசன் மாரியூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக சீனிவாசனின் உறவினர் முதுகுளத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 54) கடையில் இருந்தார்.

இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்த மர்ம கும்பல் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் ராமமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ராமமூர்த்தி அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசனை கொலை செய்யும் முயற்சியில் வந்த கும்பல் ஆள் மாறி ராமமூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடைக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இன்று கடலாடியைச் சேர்ந்த வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News