செய்திகள்

பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு

Published On 2018-10-05 04:15 GMT   |   Update On 2018-10-05 04:15 GMT
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam #MullaPeriyar
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகிற 7-ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 7388 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 127.20 அடியாக இருந்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட மூலவைகையாற்று நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து 3168 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.30 அடியாக உள்ளது. 55 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 30.2, தேக்கடி 28.6, கூடலூர் 16, சண்முகாநதி அணை 8, உத்தமபாளையம் 9.6, மஞ்சளாறு 3, கொடைக்கானல் 9 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #PeriyarDam #MullaPeriyar
Tags:    

Similar News