செய்திகள்

கார் மீது லாரி மோதல்- கல்லூரி விரிவுரையாளர்கள் 2 பேர் பலி

Published On 2018-10-04 15:01 GMT   |   Update On 2018-10-04 15:01 GMT
கரூர் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கருப்பண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 37). அதே ஊர் கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மனைவி விநாயகி (34). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் முகமது ஆரிப் தினமும் காரிலும், விநாயகி கல்லூரி பேருந்திலும் பணிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கல்லூரி பேருந்தை விநாயகி தவற விட்டார். அப்போது அந்த வழியாக வந்த முகமது ஆரிப் விநாயகியை காரில் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

நாணப்பரப்பு என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த முகமது ஆரிப் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த கார் சென்டர் மீடியனில மோதி எதிர் திசைக்கு சென்றது.
அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இதில் பலமுறை உருண்ட காருக்குள் இருந்த முகமது ஆரிப், விநாயகி இருவரும் இடிபாடுகளுக்குள்  சிக்கி பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே பிணமானார்கள்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் பலியான இருவ ரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News