செய்திகள்
பூண்டி ஏரியில் வெட்டப்படும் கால்வாய்.

பூண்டி ஏரியில் இருந்து புழல்-செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப நடவடிக்கை

Published On 2018-10-03 07:30 GMT   |   Update On 2018-10-03 07:30 GMT
பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் திறந்து விடப்படுகின்றன.

கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி புழல் ஏரிக்கும், மே மாதம் 21-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆகஸ்டு 27-ந்தேதி பேபி கால்வாயில் தண்ணீர் அனுப்புவதும் நின்று போனது.

முற்றிலுமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிலவியது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதினர்.

இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 29-ந்தேதி பூண்டிக்கு வந்தடைந்தது.

தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 620 கனஅடி வீதம் வந்து தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து வரும் தண்ணீர் பூண்டி ஏரியில் முழுவதுமாக பரவுவதை தவிர்த்து நேராக லிங்க் கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்து உள்ளனர்.

அதன்படி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் நடை பெற்று வரும் இப்பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் நிறைவடைந்தால் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை நேராக லிங்க் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விட முடியும்.

பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 198 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News