வில்லியனூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை-பணம் கொள்ளை
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழுர் மேலண்டவீதியை சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது75). கோபால்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வசித்து வருகிறார்கள்.
பழனியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவர் தினமும் தூங்க செல்ல முன்பு கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை ஒரு டப்பாவில் வைத்து விட்டு மணிபர்சை தனது தலையணையில் வைத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவும் நகையை டப்பாவில் வைத்துவிட்டு மணிபர்சை தலையணை அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.
நள்ளிரவில் திடீரென பழனியம்மாள் விழித்தெழுந்த போது தலையணையில் கீழ் வைத்திருந்த மணிபர்சை காணாமல் திடுக்கிட்டார். மேலும் டப்பாவில் வைத்திருந்த நகையையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் தினமும் நகை மற்றும் மணிபர்சை மறைத்து வைப்பதை நோட்டமிட்டு இதனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.
இதுகுறித்து பழனியம்மாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.