செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Published On 2018-09-29 12:24 GMT   |   Update On 2018-09-29 12:24 GMT
அரசியல் லாபத்துக்காக மக்கள் வரிப்பணத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். #MKStalinboycotts #MGRCentenaryfunction
சென்னை:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்தார்கள். நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற முறையிலும்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழா அழைப்பிதழில்  அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.


இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது தலைவர் கலைஞர் - எம்.ஜி.ஆர் அவர்களின் நட்பு! இதனை அரசியலாக்காமல், மக்கள் வரிப்பணத்தையும் வீணடிக்காமல் நாளை நடைபெறும் நிகழ்ச்சியிலாவது எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் நூற்றாண்டைக் கொண்டாட வேண்டுமென அரசினரை வலியுறுத்துகிறேன்!' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையெங்கும் பேனர்கள் வைத்தும், எதிர்க்கட்சிகளை வசைபாடும் விழாவாக அரசின் பெயரில் அரசியல் லாபத்துக்காக நடைபெற்று வரும் ‘எம்.ஜி.ஆர்’ நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalinboycotts #MGRCentenaryfunction
Tags:    

Similar News