செய்திகள்

திருவாரூர்-திருப்பரங்குன்றம் தொகுதிகளில் விஜயபாஸ்கர், உதயகுமார் போட்டியிட தயாரா?- தினகரன் கேள்வி

Published On 2018-09-27 06:03 GMT   |   Update On 2018-09-27 06:03 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர், உதயகுமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
நாகப்பட்டினம்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அம்மாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு நான் சதி செய்தேன் என்று அமைச்சர் தங்கமணி பேசுகிறார். அவர் பதட்டமாக இருப்பதால்தான் என்னைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியுடன் சேர்ந்து வழக்கில் அம்மாவை சிக்க வைத்துவிட்டேன் என்று சொல்கிறார்.

கருணாநிதி இறந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போதுதான் அவரை நேரில் சென்று பார்த்தேனே தவிர, அதற்கு முன்னர் நான் அவரை எங்கும் சந்தித்தது இல்லை.

அமைச்சர் வேலுமணி, தினகரன் புறவழியாக வந்தவர் என்கிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆக உள்ள விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும், மதுரையில் உள்ள அரிஸ்டாட்டில். அதாவது அக்கா பையன் உதயகுமார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தினகரன் யார் என்று கேட்கிறார்.

தி.மு.க.வையும், காங்கிரசையும் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் என்னை பற்றி வாய்க்கு வந்தபடி ஒருமையில் பேசுகிறார்கள்.


திருப்பரங்குன்றத்தில் நான் நிற்க வேண்டாம். எங்கள் கட்சி சார்பில் தொண்டர்கள் நிற்பார்கள்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உதயகுமாரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற திராணி உண்டா? துரோகிகள் டெபாசிட் இழப்பது உறுதி.

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் நடத்தும் விழாவிற்கு நான் போக வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால் விழா நடைபெறக்கூடிய அன்று நான் சென்னையிலே இல்லை. அழைப்பிதழில் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் நல்லா இருக்காது என்பதற்காக போட்டிருக்கலாம். அதனை வைத்து ஏதாவது அரசியல் செய்யலாம் என்பதற்காக கூட போட்டு இருக்கலாம்.

ஆட்சி செய்த கட்சி, ஆட்சி செய்து கொண்டிருந்த கட்சிகள் மீதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு ஒன்று பேசுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதே நாக்கு வேறு மாதிரி பேசுகிறது. மக்கள் நலனை மறந்துவிட்டு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் நலனை பேணக்கூடிய கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்று தீர்மானித்துள்ளனர்.

இடைத்தேர்தல் வைத்து விடாதீர்கள் என்று ஆளுங்கட்சியினர் டெல்லியில் கேட்பதாக நான் கேள்விப்பட்டேன். இடைத்தேர்தல் கண்டிப்பாக வர வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மக்கள் மத்தியில் யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கிறது என்பது அப்போது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதற்கு உதாரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் அமையும்.

கூட்டணி வரவேண்டிய நேரத்தில் கூட்டணி அமைப்போம். கூட்டணி தொடர்பாக பா.ம.க.விடம் இதுவரை நான் பேசவில்லை. யாரோ தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. எங்களது பிரதான எதிரிக்கட்சி. அதனால் தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் நாங்கள் கூட்டணிக்கு போக முடியாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

வடிவேல் படத்தில் நடிக்காததால் அவர் வேலையை திண்டுக்கல் சீனிவாசன் செய்து கொண்டுள்ளதால் தான் காமெடியாக பேசி வருகிறார். அம்மாவையே கொள்ளையடித்தவர் என்று பேசியவர் கசாப்பு கடைக்காரரான அவரை பற்றியெல்லாம் பேசாதீர்கள்.

இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
Tags:    

Similar News