பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல் - 2 பேர் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 47), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கலியபெருமாள் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு உறவினர்களான பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அரிகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான மருதாசலம், வெள்ளக்குட்டி, கலைச் செல்வி, ராஜாமணி ஆகியோருடன் அங்கு வந்தார்.
அரிகிருஷ்ணன் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கலியபெருமாளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருதரப்பை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கலியபெருமாள், பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி, கட்டையால் தாக்கினர்.
இந்த தாக்குதலில் கலியபெருமாள் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குபதிவு செய்த அரிகிருஷ்ணன், மருதாசலம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள கலைச்செல்வி, ராஜாமணி மற்றும் வெள்ளக்குட்டியை தேடி வருகிறார்.