செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை - ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2018-09-23 18:02 GMT   |   Update On 2018-09-23 18:02 GMT
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
ஊட்டி:

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் முகரம் பண்டிகையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக குளிர்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பூங்காவில் உள்ள உயரமான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா, நியூ கார்டன், பெரணி இல்லம், இத்தாலியன் பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்டு உள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவின் பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில்மிகு அழகை ரசித்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின் போது, பசுமையான மரங்கள், கரையோரத்தில் உள்ள பூங்காவில் உள்ள கடமான்களை கண்டு ரசித்தனர். அங்கு நிலவிய சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தனர். படகு இல்ல வளாகத்தில் விற்பனை செய்யப்படும் கிவி, மங்குஸ்தான், ரம்பூட்டான் உள்ளிட்ட பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தொலைநோக்கி மூலம் அப்பர்பவானி, ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, குண்டல்பெட், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களை பார்த்தனர். அங்கு காட்சி முனையில் நின்ற படி இயற்கை அழகு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை கண்டு ரசித்தனர். இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. 
Tags:    

Similar News