செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் - பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

Published On 2018-09-22 22:10 GMT   |   Update On 2018-09-22 22:10 GMT
இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். #Kanimozhi #Modi
சென்னை:

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.  #Kanimozhi #Modi

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்தியாவிலேயே தற்போது ஒரே ஒரு ராக்கெட் ஏவுதளம் தான் உள்ளது. அது ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும்.



விண்வெளி திட்டங்களை மேம்படுத்தியுள்ள மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு ராக்கெட் ஏவுதளங்களை வைத்துள்ளன. எனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு உதவியாக மற்றொரு புதிய ஏவுதளத்தை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

2013-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதியன்று நான் கேட்ட கேள்விக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாடாளுமன்றத்தில் தன் பதிலை முன்வைத்தது. அதில், ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ராக்கெட் ஏவுதளத்தின் திறன்களை பரிசீலித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராக்கெட் ஏவும் தேவைகளை அறிந்தும், புதிய ஏவுதளத்தின் தேவை குறித்தும் மதிப்பிடுவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது குறித்து 2013-ம் ஆண்டு பிரதமருக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதி யிருந்தார். மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.) உள்ள விஞ்ஞானிகளின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் தான் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

எல்.பி.எஸ்.சி.யின் முன்னாள் தலைமை பொதுமேலாளரின் கருத்துப்படி, குலசேகரன்பட்டினத்தில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டு இருந்தால், 1,350 கிலோ எடையுள்ள உபகரணங்களுக்கு பதிலாக 1,800 கிலோ எடையுள்ள உபகரணங்களை அனுப்பியிருக்க முடியும்.

பூமத்தியரேகைக்கும், எல்.பி.எஸ்.சி.க்கும் அருகில் இருப்பதால் இந்தியாவின் அடுத்த ராக்கெட் ஏவுதளம் உருவாக்க குலசேகரன்பட்டினம் தான் சிறந்த இடமாக இருப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. எனவே, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News