செய்திகள்

பேரணாம்பட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 விநாயகர் சிலைகள் திருட்டு- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2018-09-15 10:32 GMT   |   Update On 2018-09-15 10:32 GMT
பேரணாம்பட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 விநாயகர் சிலைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொது மக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் ‘விசர்ஜன நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் திருடுபோயுள்ளது.

பேரணாம்பட்டு டவுன் பாண்டியன் வீதியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகில் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சுமார் 3 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து மேள தாளம், தப்பாட்டம் அடித்து கொண்டாடினர்.

இன்று சிலை ஊர்வலம் நடத்த கோலாகலமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் விநாயகர் சிலையை லாரியில் ஏற்றிக் கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல், பேரணாம்பட்டு பக்காலப்பல்லி மற்றும் சாலப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலும், வீ.கோட்டா ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

விடிந்து பார்த்தபோது, சிலைகள் மாயமானதை கண்டு விழாக்குழுவினரும், பொதுமக்கள் அதிர்ச்சியில் திடுக்கிட்டனர். சாமி சிலை திருடப்பட்டுள்ளதால் தங்கள் பகுதிக்கு கெடுதல் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை திருடி கொண்டு வந்து தங்கள் பகுதியில் வைத்தால் நன்மை நடக்கும் என்று கூறப்படுவதால், விநாயகர் சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என சிலர் தெரிவித்தனர்.

விநாயகர் சிலைகள் திருடு போனதால், இன்று நடக்க இருந்த விசர்ஜன ஊர்வலம் தடைபட்டுள்ளது. இதனால், சிலைகள் திருடு போன பகுதிகளில் பதட்டமான சூழல் காணப்படுகிறது.

பேரணாம்பட்டு போலீசில் விழாக்குழுவினர் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News