செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-09-11 10:15 GMT   |   Update On 2018-09-11 10:15 GMT
உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் ஏற்கனவே 8 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் நகர் முனியப்பன்கோவில் எதிரே புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள கட்டிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இன்று அந்த கடைக்கு லாரியில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பச்சையப்பன் நகர் பகுதிக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்பு அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு டாஸ்மாக் கடை முன்பு நின்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் பகுதியில் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது. உடனே கடையை மூட வேண்டும் என்றனர்.

புதிதாக டாஸ்மாக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மூடும்படி அங்கிருந்த ஊழியர்களிடம் போலீசார் கூறினர். இதனைத்தொடர்ந்து கடையில் இறக்கப்பட்ட மதுபாட்டில்களை மீண்டும் லாரியில் ஏற்றி கடையை பூட்டினர்.

பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News