செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்- ராஜன் செல்லப்பா பேச்சு

Published On 2018-08-29 10:19 GMT   |   Update On 2018-08-29 10:19 GMT
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசினார். #thiruparankundramconstituency

மதுரை:

முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சிலைமான், எஸ். புளியங்குளம், விரகனூர், ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. விற்கு என்று ஒரு தனி வரலாறு உள்ளது 2017-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் அம்மாவின் ஆசியுடன் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 43ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா மக்கள் அளப்பரியாண பற்றும் பாசமும் வைத்துள்ளனர்.

இதனை எண்ணிப் பாராமல் தி.மு.க.வும் தினகரனும், சில எதிர்க் கட்சிகளும் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று ஊடகங்கள் வாயிலாக சவால் விட்டு வருகின்றனர். அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கூறுகிறேன்.

நாங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம், தோப்பூரில் 10 ஆயிரம் வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் பஸ்போர்ட்டை திருப்பரங்குன்றம் தொகுதியில் உருவாக்க உள்ளோம். இது மட்டுமல்லாது ரூ.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார் என்று மக்களிடத்தில் நாங்கள் எடுத்துரைத்து வெற்றி பெறுவோம்.

ஆர்.கே.நகருக்கே செல்ல முடியாமல் வார்த்தை ஜாலமிடும் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவர் எந்த சாதனையை சொல்லி மக்களிடத்தில் வாக்கு கேட்பார். ஒரு சாதனையும் செய்யாத எதிர்கட்சிகளெல்லாம் வெற்றி பெறுவோம் என்று கூறி வருவது மாயை ஆகும். மக்களும் இதை ஒரு போதும் நம்ப மாட்டார்கள் .

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட பொருளாளர் அம்பலம், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தலைமை தாங்கினர். ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பூமிபாலகன், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் பாரி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thiruparankundramconstituency 

Tags:    

Similar News