செய்திகள்

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

Published On 2018-08-26 17:25 GMT   |   Update On 2018-08-26 17:25 GMT
நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட அவ்வைநகர், சவுளுப்பட்டி, கொட்டாவூர், நேருநகர், சித்தேஸ்வரநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் ஆகியவை வழங்கி வந்தது. இந்த குடிநீரை கடந்த 3 மாத காலமாக முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று, பழைய குவார்ட்ஸ் பகுதியில் உள்ள தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழிதேவன், ஆனந்தன் மற்றும் தாசில்தார் பழனியம்மாள், அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தனர். அப்போது 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், ஊராட்சி செயலரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
Tags:    

Similar News